மிகப் பழமையான கலால் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

புதிய கலால் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மது மற்றும் புகையிலை பயன்பாடு, தொடர்புடைய வணிகங்களை ஒழுங்குபடுத்துதல், உரிய உரிமங்கள் வழங்குதல் மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போதைய கலால் சட்டம் 1912 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பான பிரேரணை முன்மொழிவாக முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய சட்ட வரைவை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.



