இன்றையவேத வசனம் 02.02.2023: பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்
ஒரு மோட்டார் பந்தயத்தில் வெற்றி பெற விரும்பும் வீரன், தன் காரில் தேவையில்லாத, எடை அதிகமாயுள்ள சில பகுதிகளை நீக்கிவிடுவான்.
அதே நேரத்தில் காரை இன்னும் அதிக வேகமாக இயக்கக் கூடிய சிறுபகுதிகள், இயந்திரங்கள் இவைகளைச் சேர்த்துக்கொள்வான்.
நீக்குதலும், சேர்த்தலும் வெற்றியைக் கொண்டு வரும். அப்படியே கிறிஸ்தவ வாழ்க்கையிலும், அவ்வப்போது தற்பரிசோதனை செய்து நீக்க வேண்டியவற்றை நீக்கி, சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து, உங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
1.நீக்குதல் (மைனஸ்):-
பிரதிஷ்டையோடும், தியாகத்தோடும் எல்லா வீண் வார்த்தைகளையும், பரியாசப் பேச்சுகளையும் உங்களை விட்டு நீக்கிப் போடுங்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு நேர உணவை நீக்கி, உபவாசத்திலிருக்க தீர்மானஞ்செய்யுங்கள். கர்த்தருக்குப் பிரியமில்லாத பழக்க வழக்கங்களை, திடமாய் உங்களை விட்டு அகற்றுங்கள். பழைய மனுஷனைக் களைந்து போடுங்கள் என்று வேதம் சொல்லுகிறது.
2.சேர்த்தல் (பிளஸ்):-
ஜெப நேரங்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். வேதவாசிப்பை அதிகப்படுத்துங்கள். கர்த்தரைப் பற்றி மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதற்கு நேரங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேறுவதற்கு என்னென்ன வழிகள் வாய்ப்புகள் உண்டோ, அத்தனையும் உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது ஆவிக்குரிய வாழ்க்கையில் ஜெயத்தின்மேல் ஜெயம் பெறுவீர்கள்.
ஒன்று செய்கிறேன் . பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி... பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (#பிலிப்பியர் 3:13,14 )
ஆமென்!! அல்லேலூயா!!!