சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

31 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வேணுர குணவர்தனவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (20) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய தலைவரின் கணக்கில் நான்கரை இலட்சம் ரூபா பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
சந்தேகநபரை தகுந்த பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றில் முன்வைத்த சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், குறித்த கோரிக்கையை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ள போது அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த பண மோசடி காரணமாக சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளராக கடமையாற்றிய இந்திக்க ஹேமல் ரத்னமல்ல இன்று (21ஆம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



