அவசரக் கல்யாணம். நிறைய காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவடையக் காரணமே அவை தான்.காதல் விதிகள். பாகம் - 12.

#Love #Article #Tamil People
அவசரக் கல்யாணம். நிறைய காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவடையக் காரணமே அவை  தான்.காதல் விதிகள். பாகம் - 12.

நிறைய காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவடையக் காரணமே அவை அவசரத் திருமணமாக இருக்கும் என்பதுதான்.  ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படும்போது, அதிலிருந்து தப்பிப்பதற்காக சரியான திட்டமிடல் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் முடித்துக்கொள்வது என இறங்கிவிடுகிறார்கள்.  இதனால் இருவருமே வேலை வாய்ப்பு.  கல்வி போன்றவற்றை திட்டமிட்டபடி அடைய முடியாமல் கிடைத்ததைக்கொண்டு வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

வசதியான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு பின்னர் கஷ்டமான சூழலில் இருப்பது சில மாதங்கள் வரையே தாக்குப்பிடிக்கும்.  இனி வாழ்வு முழுவதும் இப்படிப்பட்ட விதிதான் என்ற எண்ணம் வந்துவிட்டால் பயம் ஏற்பட்டுவிடும்.  வாழ்வில் பயம் வந்துவிட்டால் காதல் காணாமல் போய்விடும்.

அவரசக் கல்யாணம் முடித்துக்கொள்வதால், பெற்றவர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவை இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது.  இது பொருளாதார ரீதியில் மட்டும் தோல்வி என்பது அல்ல, மனரீதியாக நிராதரவாகிவிட்டோம் என்ற எண்ணம், பயத்தை கிளப்பிவிடும்.
அதற்காக, அவரசக் கல்யாணம் முடித்ததால் எல்லாமே தோற்று விட்டது என்பது அர்த்தம் அல்ல.  நிஜத்தைத் தெளிவாக புரிந்து கொண்டு, வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் மனப்பக்குவம் கிடைத்துவிட்டால் எல்லாமே சுகமாகிவிடும்.

காத்திருக்கலாமே!

காதல் விவகாரம்  வீட்டில் தெரியவந்தவுடன் அடுத்தடுத்துப் பிரச்சனைகள் கண்டிப்பாக வரும்.  குழந்தையாக பாவிக்கப் பட்டவர்கள் திடீரென ஒரு மிகப்பெரிய முடிவை, அவர்களாகவே எடுக்கும்போது கோபம், ஆத்திரம் எல்லாம் பெற்றவர்களுக்கு ஏற்படுவது நியாயமே.

‘ஏன் நமது நியாயமான காதல் ஆசையை, ஆர்வத்தை புரிந்துகொள்ளாமல் பெற்றவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்?’ எனச் சிந்திக்காமல், அவர்களது கோபம் நியாயமே, அது தீர்வுக்கு சிறிது நேரம் கொடுக்கலாம் எனக் காத்திருங்கள்.

ஜவஹர்லால் நேரு மகளான இந்திரா, படிக்கும் காலத்தில் பெரோஸ் காந்தியை காதலித்தார்.  விஷயம் பிரதமராக இருந்த நேருவின் காதுகளுக்குப் போனது.  ‘நான்கு வருட காலம் இருவரும் சந்திக்காமல், பேசிக் கொள்ளாமல், கடிதம் எழுதாமல் இருங்கள்.  அதற்குப் பின்னர் இருவருக்கும் காதல் இருப்பதாகத் தெரிந்தால் திருமணம் முடித்து வைக்கிறேன்’ என்று நிபர்ந்தனை விதித்தார்.

இருவரும் காதலுக்காக சொன்ன சொல்லை காப்பாற்றிக் கிடந்தார்கள்.  அவர்கள் இருவரும் அன்போடு காதலில் காத்துக் கிடந்திருப்பதைப் பார்த்த நேரு, விரைவிலேயே இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தார்.  எனவே, பெற்றோர்களது கோபம் தீரும் வரை காத்திருங்கள்.  காத்திருந்தால் கண்டிப்பாக நல்லதே நடக்கும்.
பெற்றோர், காதல் இரண்டும் மனிதனுக்கு இரு கண்களைப் போன்றது என ஏற்கனவே பார்த்தோம்.  அதனால் இரண்டுடனும் சேர்ந்து வாழ்வதற்காக முடிந்தவரை கஷ்டப்பட்டு சம்மதம் பெறுவதே நல்லது.

சில பெற்றோர்கள் காதலுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.  ஆனால் இந்த காதலுக்கு இசைவு தெரிவித்தால் அடுத்ததாக, தம்பி, தங்கைக்கு திருமணம் முடிப்பதில் சிக்கல் ஏற்படும் என பயப்படுவார்கள்.  அவர்களது சந்தேகம், பயம் நியாயமானதே.  அதனால் உங்களது காதலால் குடும்பத்தில் மற்றவர்களது எதிர்காலத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க வேண்டியது உங்கள் கடைமை.  காதல் திருமணங்கள் என்பது இப்போது வெகு சகஜமாக நடைபெறுகின்றன.

இது சமூக குற்றம் அல்ல என்பதை எடுத்துச் சொல்லி, அவர்களது அன்பைப் பெற்று அதன்பிறகு திருமணம் முடிப்பதே நல்லது.

காதல் என்ற கனவுக் கோட்டையைப் பிடிக்க ஏழு மலை, எட்டு கடல் கடந்துபோகும் பொறுமை இருவருக்கும் இருக்க வேண்டும்.  அப்போதுதான் இருவரும் உண்மைக்காதல் செய்கிறார்கள் என அர்த்தமாகும்.