மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க முடியாது!! – லங்கா ஐ.ஓ.சியும் கைவிரித்தது!!
இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நிராகரித்துள்ளது என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
தற்சமயம் கூடுதலான எரிபொருள் இல்லாததால் மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க முடியாதிருக்கின்றது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் எரிபொருள் கையிருப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், எரிசக்தி அமைச்சிடம் எரிபொருள் வழங்கலை எதிர்பார்த்துள்ளது.
ஆயினும் டொலர் பிரச்சினையால் மின்சார சபைக்கான எரிபொருளை வழங்க முடியாது என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்திருந்தது. அதனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து மின்சார சபைக்குத் தேவையான எரிபொருள் கிடைக்கவில்லை.
இந்தநிலையில், மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் இருந்து எரிபொருளைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று நேற்றுத் தெரிவித்திருந்தார்.
ஆயினும் அந்தக் கோரிக்கை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, எரிபொருள் கையிருப்பு முடிந்துள்ளதால் இன்று 4 மணிக்குப் பின்னர் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என்று மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.