பச்சிளம் குழந்தை உட்பட 16 புலம்பெயர்ந்தோர் பலி. நடுக்கடலில் கவிழ்ந்த படகு.

மத்திய ஏஜியன் கடலில் உள்ள கிரேக்க தீவான பரோஸ் அருகே வெள்ளிக்கிழமை படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புலம்பெயர்ந்தோர் 16 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட மூன்றாவது கடல்சார் விபத்து இது என கிரீஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததை தொடர்ந்து அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவயிடத்திற்கு ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது வரை 12 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பலில் 80 பேர் பயணித்ததாகவும், அது துருக்கியிலிருந்து இத்தாலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்ததாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கப்பல் எப்படி விபத்துக்குள்ளானது என்பது தற்போது வரை தெளிவாகவில்லை.
ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பாற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய கிரீஸ் முக்கிய பாதையாக உள்ளது.
கடத்தல் கும்பல்கள் தான் இந்த விபத்திற்கு காரணம் என கிரீஸ் கப்பல் துறை அமைச்சர் Giannis Plakiotakis தெரிவித்துள்ளார்.



