ஆபாசப் படங்களை அனுப்பிய நபர் - எட்டு வாரம் சிறை $20,000 அபராதம்

தீய நோக்கம் கொண்ட ஓர் இணையத்தளத்துடன் தொடர்புடைய ஒரு டெலிகிராம் குழுவைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறை கைது செய்தது.
அவர்களில் ஒருவருக்கு நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த இணையத்தளம் ஆபாச காணொளிகளையும் படங்களையும் பகிர்ந்து வந்தது. லிங்கன் ஆண்டனி ஃபெர்னாண்டஸ் என்பவருக்கு எட்டு வாரம் சிறைத்தண்டனையும் $20,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இணையம்வழி ஆபாசப் படங்களை அனுப்பியதாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் கூறும் ஒரு குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அந்த 31 வயது சிங்கப்பூரர், 20 ஆண்டுகளாக இயங்கும் ‘சேமிபாய்’ என்ற இணையத்தளத்துடன் தொடர்புடைய ஒரு குழுவைச் சேர்ந்தவர். அந்த இணையத்தளத்தில் பல ஆண்டு காலமாக படங்களைப் பகிர்ந்துவந்த பல ஆடவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஃபெர்னாண்டஸ் அந்தக் குழுவில் 2017 பிற்பகுதியில் சேர்ந்தார். 2019ல் அவர் மூன்று ஆபாசப் படங்களை டெலிகிராம் செய்திச் சேவை வழியாக குழு உறுப்பினர்களுக்கு அனுப்பினார். அந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 25,000. அந்தக் குழு பற்றி 23 வயது மாது ஒருவர் 2019 அக்டோபர் 24ஆம் தேதி காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதற்கு அடுத்த மாதம் அதிகாரிகள் ஃபெர்னாண்டசின் வீட்டிற்குச் சென்றபோது அங்கு 118 ஆபாசப் படங்களைக் கைப்பற்றினர்.
கைதாகி இருக்கும் நால்வரில் நீதிமன்றத் தண்டனைக்கு உட்பட்டு இருக்கும் முதலாவது நபர் ஃபெர்னாண்டஸ். அவருக்கு $5,000 பிணை அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அவர் ஜனவரி 3ஆம் தேதி அரசு நீதிமன்றத்துக்குத் திரும்பி தண்டனையை அனுபவிக்கத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
வோங் மிங் ஜுன், 28, டான் இயோவ் சோங், 40, யீ விங் கே, 47 ஆகிய மூவருக்கும் எதிரான வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.



