யாழ் மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம் இன்று: ஆதரிப்பதா இல்லையா? கட்சிகள் ஆராய்வு

#Jaffna
Mayoorikka
4 years ago
யாழ் மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம் இன்று: ஆதரிப்பதா இல்லையா? கட்சிகள் ஆராய்வு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

இதேநேரம், ஈ. பி. டி. பி. கட்சிக்குள் இந்த விடயம் குறித்து இழுபறி நிலை காணப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள்   தெரிவித்தன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல்வர் மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்நிலையில், 45உறுப்பினர்களை கொண்ட யாழ். மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று முக்கிய கட்சிகள் நேற்றுக் கூடி ஆராய்ந்தன. 16 உறுப்பினர்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த மாநகரசபை உறுப்பினர்களின் கூட்டம் நேற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் வரவு - செலவு திட்டத்தை ஆதரிப்பதில்லை என்ற முடிவை உறுப்பினர்கள் ஏகமனதாக எடுத்தனர் என்று அந்தக் கட்சியின் வட்டாரங்களிலிலுருந்து அறிய முடிந்தது.

மாநகர முதல்வர் உட்பட 13 உறுப்பினர்களை கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இரு அணிகளாக ஏற்கனவே பிளவுண்டுள்ளனர். இதில் 10 உறுப்பினர்கள் மணிவண்ணன் பக்கம் உள்ள நிலையில், 3 உறுப்பினர்கள் அவர்கள் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைமையின்கீழ் இயங்குகின்றனர். இவர்கள் நேற்று கட்சியின் தலைமையுடன் பேசினர். 

இந்நிலையில், நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'தமதுநிலைப்பாடு நாளை (இன்று) வெளிப்படுத்தப்படும்', என்று கூறினார். 

எனினும், உட்கட்சி வட்டாரங்களின் தகவலின்படி வரவு - செலவு திட்டத்தை எதிர்க்கும் முடிவிலேயே உள்ளதாக அறியமுடிந்தது. எனினும், இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. இதேவேளை, 10 மாநகர உறுப்பினர்களை கொண்ட ஈ. பி. டி. பி. கட்சியும் இந்த விடயம் தொடர்பில் கூடி ஆராய்ந்தது. இந்தக் கூட்டத்தில் ஒரு பகுதியினர் வரவு - செலவு திட்டத்தை ஆதரிப்பதாகவும், இன்னொரு பகுதியினர் எதிர்ப்பதாகவும் கூறினர். கூட்டத்தின் முடிவுவரை இந்த இழுபறி நிலை நீடித்தது. எனினும், எதிர்க்கும் முடிவை வெளியிட்ட உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தனர் என்று அறியவருகின்றது. இதனிடையே அந்தக் கட்சியின் உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா மாவட்டத்தில் இல்லாமையால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனத்தெரிகிறது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!