கன்டெய்னர் லாரி விபத்து - 54 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சியில் ஐ.நா.

மத்திய அமெரிக்காவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த டிரக், மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் மாகாணத்தின் புறநகர் பகுதியில் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஆபத்தான வளைவில் கன்டெய்னர் லாரி திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 54 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அளவுக்கு அதிகமாக ஆட்களை கன்டெய்னர் லாரியில் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அகதிகளை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 54 பேர் உயிரிழந்த சம்பவம் தன்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.uni



