ஊழியர்களுக்கு ரூ.1.2 லட்சம் கூடுதல் போனஸ் வழங்கும் கூகுள் நிறுவனம்

பணியாளர்கள் அலுவலகத்திற்குத் திரும்பும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ள கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் நீட்டிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் கூகுள் இந்த மாதம் 1,600 அமெரிக்க டாலர் அல்லது அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப அதற்கு சமமான மதிப்புடைய தொகையை வழங்கும் என்று கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கான உதவித்தொகையுடன், இந்த நல்வாழ்வு போனஸும் கூடுதலாக வழங்கப்படுவது கூகுள் பணியாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி என அவர் தெரிவித்தார்.
முன்னதாக மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட கூகுளின் உள்ஆய்வில் கடந்த ஆண்டில் ஊழியர்களின் வாழ்க்கைத்தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த நிறுவனம் 500 டாலர் நல்வாழ்வு ரொக்க போனஸ் உட்பட தொடர்ச்சியான பல அறிவிப்புகளை வெளியிட்டது.
ஜனவரி 10ஆம் தேதி முதல் கூகுள் ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.



