மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பகுதியில் இராணுவத்தினராலும், குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும், ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
வடக்கு- கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிகோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தொனிப்பொருளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகிலுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், பல்சமய ஒன்றியங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.



