பாகிஸ்தானில் ‘டிக் டாக்' செயலி மீதான தடை நீக்கம்
இந்த செயலியில் மிகவும் ஆபாசமான மற்றும் எல்ஜிபிடி (ஓரின சேர்க்கையாளர்கள்) சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகள் இருப்பதாக கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது. எனினும் ஆபாசத்தை பரப்பும் கணக்குகளை தடுப்பதாக டிக் டாக் நிறுவனம் உறுதி அளித்ததால் 10 நாட்களுக்கு பிறகு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்பட்டது.
இதனிடையே ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை நீக்க தவறியதாக கூறி டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் கடந்த ஜூலை மாதம் மீண்டும் தடை விதித்தது.
எனினும் இந்த விவகாரம் தொடர்பாக டிக்டாக் நிர்வாகத்துடன் பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த நிலையில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெறுவதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் நேற்று அறிவித்தது. ஒழுக்கமற்ற மற்றும் அநாகரீகமான விடியோ பதிவுகளை முழுமையாக கட்டுப்படுத்துவதாக டிக்டாக் நிறுவனம் உறுதியளித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக் உள்பட சீனாவின் 100-க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு இந்தியா கடந்த ஆண்டு தடை விதித்தது நினைவு கூரத்தக்கது.