விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த சர்வதேச பிரபலங்கள்
விவசாயிகள் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, பல சர்வதேச பிரபலங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ரிஹானா: அமெரிக்க பாடகர் மற்றும் நடிகையுமான ரிஹானா, டில்லி விவசாயிகள் போராட்டம் குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் பத்திரிகை செய்தியை பகிர்ந்து, 'இது குறித்து நாம் ஏன் பேசுவதில்லை' எனக் கேள்வி எழுப்பினார். இது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
க்ரெட்டா தன்பர்க்: ஐரோப்பிய நாடான சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான க்ரெட்டா, 'போராட்டம் நடத்தும் இந்திய விவசாயிகளுடன் நாங்கள் துணை நிற்கிறோம்' என்றார்.
அமாண்டா செர்னி: பாடகி ரிஹானாவின் ஆதரவு பதிவை பலர் கிண்டல் செய்தனர். இதையடுத்து அமெரிக்க வலைதள 'வீடியோ' பதிவரான அமாண்டா செர்னி, ரிஹானாவுக்கு ஆதரவாக களம் இறங்கினார். 'அடிப்படை மனித உரிமைக்கு ஆதரவாக இருப்பேன்' என, அவர் தெரிவித்தார்.
ஹசன் மின்ஹாஜ்: அமெரிக்க நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நடிகர், 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர் என, பலமுகம் உடைய இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பல்வேறு அமெரிக்க நிகழ்ச்சிகளில் போராட்டம் குறித்து தொடர்ந்து பேசி வந்தார்.
மீனா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் சகோதரி மகளும், வழக்கறிஞருமான இவர், 'உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மீது தாக்குதல் நடக்கிறது. நாம் எதிர்வினை யாற்ற வேண்டும்' என்றார்.
ஜுஜு ஸ்மித்ஷஸ்டர்: அமெரிக்க கால் பந்தாட்ட வீரரான இவர், போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ள விவசாயிகளின் மருத்துவ செலவுகளுக்காக 7.50 லட்சம் ரூபாய் நிதி அளித்தார்.
லில்லி சிங்: கனடாவை சேர்ந்த இவர், கடந்த மார்ச்சில் கிராமி விருது பெற்றார். அப்போது, 'விவசாயிகளை ஆதரிக்கிறேன்' என, எழுதப்பட்ட முக கவசம் அணிந்து மேடையில் தோன்றினார்.