உண்மையில் சொர்க்கம் - நரகம் என்றால் என்ன தெரியுமா....

Nila
2 years ago
உண்மையில் சொர்க்கம் - நரகம் என்றால் என்ன தெரியுமா....

பொதுவாக சொர்க்கமும், நரகமும் கடவுள் படைப்பதில்லை. அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் தான் தன்னுடைய மனோபாவத்திற்கும், சூழ்நிலைக்கும், ஏற்றார் போல் சொர்க்கத்தையும் நரகத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இப்படித் தான் கடவுளிடம் ஒரு தேவதூதன்,

“ஆண்டவரே! ஏன் ஞானிகள் மட்டுமே சொர்க்கத்திற்கு செல்கின்றனர்?. எனில், சொர்க்கம் அவர்களைப் போன்ற நல்லவர்களுக்கு மட்டும் தானா? அதே போல, நரகத்தில் உள்ளவர்கள் என்ன பாவம் செய்தனர்?. ஏன் அவர்களால் சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்க முடிவதில்லை?!” என்று கேட்டான்.

அது கேட்ட கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னாராம்,

”தேவதூதனே! நானே நினைத்தாலும் ஞானிகளை மற்றும் நல்ல உள்ளம் கொண்டவர்களை நரகத்தில் தள்ள முடியாது. காரணம் அவர்கள் அனைவருக்கும் நரகத்தையும் கூட சொர்க்கமாகும் வித்தை தெரியும்!” என்று.

ஆனால் தேவதூதனுக்கு கடவுள் சொன்ன அந்த வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை. கடவுளிடமே, அது பற்றி மேலும் விளக்குமாறு கேட்டான்…

” உனக்கு நான் விளக்குவதை விட நேரில் சென்றே காட்டுகிறேன்!” என்றபடி கடவுள் அந்த தேவதூதனை முதலில் நரகத்திற்கு அழைத்துச் சென்றார்.

நரக வாசிகள் கடும் பசியால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தனர். கடவுள் அவர்களிடம்,”நான் உங்களுக்கு சுவையான உணவுகளை இப்போதே தருகிறேன். எனினும் ஒரு நிபந்தனை… அந்த உணவுகளை உங்கள் கைகள் மடங்கிய நிலையில் நீங்கள் உண்ணக்கூடாது. மாறாக, உங்களது கையை மடக்காமல் சாப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் கையை மடக்கினீர்கள் என்றால் அந்த உணவு உங்கள் கையை விட்டு மறைந்து விடும்!” என்றாராம்.

பிறகு தேவதூதனை சொர்கத்திற்கு அழைத்துச் சென்றார். மேற்கண்ட அதே நிபந்தனையை அங்கும் கடவுள் விதித்தார்.

ஒரு நாள் கடந்தது. இப்போது கடவுள் தேவதூதனை அழைத்துக் கொண்டு முதலில் நரகத்திற்கு சென்றார். அங்கு யாருமே உணவை உட்கொள்ளவில்லை… கையை மடக்காமல் அவர்களால் உட்கொள்ளவே முடியவில்லை… இதனால் உணவுகள் அனைத்துமே கீழே சிந்தி வீண் அடைந்து இருந்தது.

“சரி சொர்க்கத்தில் என்ன நடந்தது?!…பார்ப்போம் வா!…” என்றபடி அந்தத் தேவ தூதனை அழைத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு சென்றார். அங்கு ஒரு பருக்கை உணவு கூட கீழே சிந்தவில்லை. அத்துடன் கடவுள் கொடுத்த அனைத்து வகை உணவுகளும் திருப்தியாக காலி ஆகி காணப்பட்டது. அது கண்டு ஒரு கணம் கடவுளே ஆச்சர்யம் கொண்டார்.

ஒரு கட்டத்தில் அந்த சொர்க்க வாசிகளிடத்திலேயே… “இது எப்படி உங்களுக்கு சாத்தியமானது?” என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டார்.
உடனே சொர்க்கவாசிகள் சொன்னார்களாம்,”கடவுளே நீங்கள் பாட்டிற்கு கையை மடக்காமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள்!…’அது எப்படி சாப்பிட முடியும்?!…’ என்று சிந்தித்தோம். உடனே எங்களுக்கு ஒரு யோசனை வந்தது. அதன் படி எங்கள் உணவை இன்னொருவருக்கு ஊட்டினோம். அவர் பதிலுக்கு அவரது உணவை எங்களுக்கு ஊட்டி விட்டார். இப்படியாக சொர்க்கத்தில் இருந்த அனைவருமே…உணவுகள் அனைத்தையும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டோம். இதனால் சிறிது அளவு கூட உணவு கீழே சிந்தவில்லை. அத்துடன் எங்கள் வயிறும், மனமும் முழுவதும் நிறைந்தது!” என்றனர்.

அக்கணம் கடவுள் சிரித்துக் கொண்டே தேவதூதனை பார்க்க… இப்போது அவனுக்கு எல்லாமே விளங்கி விட்டது.

‘நமக்கும் கூட விளங்கி விட்டது தானே!’…உண்மையில் சொர்க்கமும் – நரகமும் நாம் எவ்வாறு சூழ்நிலைகளை கையாள்கிறோம் என்பதைப் பொருத்துத் தான் நிர்ணயிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!