உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த அமெரிக்க குழந்தை
அமெரிக்காவில் அரைக் கிலோ எடையுடன் பிறந்த குழந்தை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவில் 21 வாரம் 1 நாள் கர்ப்பத்தில் பிறந்த அரைக் கிலோவுக்கு குறைவான எடை கொண்ட குழந்தை உலகிலேயே குறைவான கர்ப்ப காலத்தில் பிறந்து உயிர் பிழைத்திருக்கிற குழந்தை என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது என பர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தின் குழந்தை நிபுணரும் அப்பிரசவம் பார்த்த மருத்துவருமான பிரயன் சிம்ஸ் தெரிவித்துள்ளார்.
இக் கின்னஸ் சாதனை குறித்து அவர் கூறுகையில்,
"நான் இந்தத் துறையில் 20 வருடமாக இருக்கிறேன். இந்த அளவில் குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தையை நான் பார்த்தது இல்லை. இவன் தனித்துவமானவன்" என்றார்.
கர்டிஸ் மீன்ஸ் என்ற அந்தக் குழந்தையை அமெரிக்காவின் அலபாமா மாகணத்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் பிரசவித்தார் அவரது தாய் மிஷல் பட்லர்.
பிறக்கும்போது கர்டிசின் எடை வெறும் 420 கிராம்தான். தற்போது கர்டிசுக்கு ஒரு வயது 4 மாதம்.
இதற்கு முன்பு இந்தச் சாதனையை வைத்திருந்த குழந்தை ரிச்சர்ட் ஹச்சின்சன், 21 வாரங்கள் இரு நாட்களில் பிறந்தான். இந்தச் சாதனையை ரிச்சர்ட் ஹச்சிசன் 1 மாதம் முன்புதான் நிகழ்த்தியிருந்தான்.
ரிச்சர்டுக்கு முன்பாக இந்தச் சாதனை கடந்த 34 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்தது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.