வெலிசர பயங்கர விபத்து தொடர்பில் மேலும் வெளியாகிய தகவல்கள்
வெலிசர பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தை ஏற்படுத்திய கார், சந்தேக நபரான 16 வயது சிறுவனினி தந்தையினுடையது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காரின் உரிமையாளர் வெலிசர - மஹபாகே பகுதியில் தங்க ஆபரண வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர் ஒருவர் எனவும், அவர் இன்று காலை தனது காரை கழுவி சுத்தம் செய்து விட்டு, பணி நிமித்தமாகக் கொழும்பு செல்ல தயாராகியுள்ளார் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
மேற்படி வர்த்தகர் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தபோதே, குறித்த சிறுவன் தனது மூத்த சகோதரியை கறுப்பு மொன்டேரோ ரக காரில் ஏற்றிக்கொண்டு வீட்டிலிருந்து பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் எந்த தேவையும் இன்றியே வீட்டிலிருந்து காரை எடுத்துச்சென்றுள்ளதாக இளைஞரின் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு திசையாக பயணித்த குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
அத்துடன், குறித்த கார் வீதியின் நடுவில் உள்ள தடுப்பை கடந்து மறுபுறம் திரும்பி மற்றொரு காரின் மீது விழுந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹபாகே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 16 வயதான சிறுவனை தமது பொறுப்பில் எடுத்துள்ளதுடன், அவரது தந்தையையும் கைதுசெய்துள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.