சுவிட்சர்லாந்து ஜோன்சன் என்ட் ஜோன்சன் தடுப்பூசியை பயன்படுத்த ஆயத்தங்கள் முன்னெடுப்பு

சுவிட்சர்லாந்தில் ஜோன்சன் என்ட் ஜோசன் கோவிட் தடுப்பூசி பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு தொகுதி ஜோன்சன் என்ட் ஜோன்சன் தடுப்பூசி சுவிட்சர்லாந்திற்கு கிடைக்கப்பெறவுள்ளது.
எனினும் குறிப்பிட்டளவு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.
ஜோன்சன் என்ட் ஜோன்சன் நிறுவனத்துடன் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், 150,000 மாத்திரை ஜோன்சன் என்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் மட்டுமே கொள்வனவு செய்யப்பட உள்ளது.
இதுவரையில் 19.5 மில்லியன் மொடர்னா மற்றும் பைசர் ஆகிய தடுப்பூசிகளை சுவிட்சர்லாந்து கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகளினால் ஒவ்வாமை ஏற்படக்கூடிய நபர்களுக்கு மட்டும் ஜோன்சன் என்ட் ஜோன்சன் தடுப்பூசி மாத்திரை ஏற்றப்பட உள்ளது.
மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்திற்கு மாறுபட்ட தொழில்நுட்பம் ஜோன்சன் என்ட் ஜோன்சன் தடுப்பூசி உற்பத்தியன் போது பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகளின் மூலம் பூரண நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுக்கொள்ள இரண்டு மாத்திரை தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்ற போதிலும், ஜோன்சன் என்ட் ஜோன்சன் தடுப்பூசியின் ஒரு மாத்திரையின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், மொடர்னா, பைசர் தடுப்பூசிகளின் செயற்திறன் 90 வீதமாகவும், ஜோன்சன் என்ட் ஜோன்சன் தடுப்பூசியின் செயற்திறன் 66.9 வீதமாகவும் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
18 வயதுக்கும் மேற்பட்ட mRNA தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2022ம் ஆண்டுக்காக தலா ஏழு மில்லியன் மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்ய உள்ளது.
இதேவேளை, ஜோன்சன் என்ட் ஜோசன்சன் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



