84 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; சாமர சம்பத்தின் பிணை மனு நிராகரிப்பு!
84 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) நிராகரித்துள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொஸ்பேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தனியார் நிறுவனங்களிடமிருந்து 84 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொஸ்பேட் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கியமை தொடர்பிலேயே இந்த இலஞ்சக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.