மருத்துவர்களின் 5 கோரிக்கைகள்: அரசுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இறுதி எச்சரிக்கை!
மருத்துவர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பான ஐந்து முக்கிய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கத் தவறினால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
கடந்த நவம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில், அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இறுதி வாய்ப்பை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து சங்கத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் முன்வைத்துள்ள ஐந்து முக்கிய கோரிக்கைகள்: அங்கீகரிக்கப்பட்ட இடையூறு, கிடைப்புநிலை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவை (DAT Allowance) முழுமையாக வழங்குதல்.
மேலதிக கடமை மற்றும் விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகளில் இடைநிறுத்தப்பட்டுள்ள மூன்றில் ஒரு பங்கினை மீள வழங்குதல். DAT கொடுப்பனவை வரி அறவீட்டிலிருந்து விலக்குதல்.
22/99 சுற்றறிக்கையின் கீழ் போக்குவரத்து வசதிக்குத் தகுதியுடைய மருத்துவர்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தல். வரிச் சலுகைகளுடன் கூடிய வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அரசாங்கத்துடன் கலந்துரையாட முயற்சித்த போதிலும், இதுவரை திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என GMOA சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, 2026 ஜூலை மாதத்தில் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரிடம் 20 முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதுடன், மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதும் இந்த முன்மொழிவுகளின் முக்கிய நோக்கங்களாக அமைந்திருந்தன.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சில கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டதன் மூலம் நாட்டுக்கு 44 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேமிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் GMOA குறிப்பிட்டுள்ளது.
மருத்துவர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாமையும், சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்குப் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையும் இலவச சுகாதார சேவையின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும் எனவும் சங்கம் எச்சரித்துள்ளது.
நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு இதுவரை மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்ததாகத் தெரிவித்துள்ள GMOA, அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கையைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.