வழுக்கைக்குப் புதிய சிகிச்சை – 28 நாட்களில் வியக்கவைத்த சீன விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

#SriLanka #China #Treatment #LANKA4 #University
Abi
51 minutes ago
வழுக்கைக்குப் புதிய சிகிச்சை – 28 நாட்களில் வியக்கவைத்த சீன விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி மீண்டும் முடி வளர்ச்சியைத் தூண்டும் வகையில் சீன விஞ்ஞானிகள் புதிய மின்னணு சீப்பொன்றை உருவாக்கியுள்ளனர். ஆய்வக எலிகள் மீதான பரிசோதனையில், 28 நாட்களுக்குள் சுமார் 98 சதவீத முடி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெய்ஜிங்கிலுள்ள பீஹாங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஹொங்கொங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்தப் புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

'Detangle' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சாதனம் தொடர்பான ஆய்வு, நவம்பர் 03ஆம் திகதி 'Nature Communications' என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மின்னணு சீப்பு மென்மையான மின்தூண்டலைப் பயன்படுத்துவதுடன், முடி வேர்ப்பகுதிகளுக்கு நேரடியாகச் சிகிச்சை மூலக்கூறுகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக முடி உதிர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகள் தோலில் பூசும் முறையைச் சார்ந்துள்ளன. ஆனால், இந்தப் புதிய சீப்பின் பற்களில் பொருத்தப்பட்டுள்ள நுண்ணிய மின்முனைகள், தலைமுடியைச் சீவும்போது மின்துடிப்புகளை உருவாக்குகின்றன.

இதன் மூலம் சிகிச்சை மூலக்கூறுகள் தோலின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று முடி வேர்களைச் சென்றடைய உதவுகின்றன. மரபணு மற்றும் ஹோர்மோன் காரணிகளுடன் தொடர்புடைய வழுக்கைத் தன்மை (Androgenetic Alopecia) செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஆய்வக எலிகள் மீது இந்தச் சாதனம் பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது, மின்தூண்டல் மற்றும் சிகிச்சை மூலக்கூறுகள் இணைந்த முறையைப் பயன்படுத்திய எலிகளில் 28 நாட்களுக்குப் பின்னர் 97.85 சதவீத முடி மூடல் பதிவாகியுள்ளது.

அதே காலப்பகுதியில், முடி உதிர்வுக்குச் சிகிச்சையாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் மினொக்சிடில் (Minoxidil) மருந்தைப் பெற்ற எலிகளில் சுமார் 70 சதவீத முடி மூடலே பதிவாகியுள்ளது.

இந்த முடிவுகள், முடி உதிர்வுக்கான சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.

அன்றாடம் பயன்படுத்தப்படும் சீப்புடன் இந்தத் தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம் முடி உதிர்வுக்கான சிகிச்சையை எளிதாக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மனிதர்களுக்கு எப்போது பயன்பாட்டுக்கு வரும்? எனினும், இந்தச் சாதனம் தற்போது பரிசோதனை நிலையிலேயே உள்ளது.

இதன் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்டகாலப் பயன்பாட்டு விளைவுகள் குறித்து மனிதர்களில் மருத்துவப் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, மனிதர்களுக்கு முடியை மீண்டும் வளரச் செய்வதில் இந்தச் சாதனத்தின் திறனை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகளும் மருத்துவப் பரிசோதனைகளும் அவசியம் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் வழுக்கைத் தன்மைக்கான புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கும் முயற்சியில் இந்த மின்னணு சீப்பு நம்பிக்கையளிக்கும் புதிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!