தொழிற்சங்கத் தலைவர்கள் கைது: மக்கள் எழுச்சியை அடக்கவே அரசாங்கம் முயற்சி – சஜித் கடும் சாடல்!

#SriLanka #ARREST #Sajith Premadasa #government #LANKA4 #union #Public
Abi
42 minutes ago
தொழிற்சங்கத் தலைவர்கள் கைது: மக்கள் எழுச்சியை அடக்கவே அரசாங்கம் முயற்சி – சஜித் கடும் சாடல்!

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவதைத் தடுப்பதற்கும், மக்கள் எழுச்சியை அடக்குவதற்கும் அரசாங்கம் தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஊழியரும், சமகி ஜன பலவேகயவின் உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான டி.டி. ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டமை தொடர்பில், நவம்பர் 17ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தபோது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலியம், மின்சார உற்பத்தி மற்றும் வலுசக்தித் துறைகள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கருத்துக்களை முன்வைத்து வந்ததுடன், நுகர்வோர் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்த ஆனந்த பாலித்த திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளதாக சஜித் தெரிவித்துள்ளார்.

அவரது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான உபுல் ஜயசூரிய தலைமையில் சுயாதீன சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்திற்கான வெளியும் மக்களின் அடிப்படை உரிமைகளும் மோசமடைந்து வருவதாகக் குற்றம்சாட்டிய சஜித், நாடாளுமன்றத்திற்குள் மக்களின் சார்பில் கேள்விகளை எழுப்ப முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்கள் நாடாளுமன்ற ஹன்சார்டிலிருந்து நீக்கப்படுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பாதிக்கப்படும் வகையிலான ஆட்சிப் போக்கு உருவாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ள நிலையில், அவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காகத் தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து தண்டிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சஜித் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனந்த பாலித்த கைது தொடர்பான பின்னணி இதேவேளை, 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் சுமார் 31.1 இலட்சம் ரூபா மேலதிக நேரக் கொடுப்பனவு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு ஆனந்த பாலித்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர், நவம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!