பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் முட்டை விலை – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!
பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டின் உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.
தற்போது சந்தையில் ஒரு முட்டை 42 முதல் 45 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை மற்றும் சந்தையில் முட்டைக்கான கேள்வி உயர்வடைந்துள்ளமை ஆகியன இந்த விலை அதிகரிப்புக்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனமழை காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்களினால் முட்டையிடும் கோழிகளின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கோழிப் பண்ணைகளில் சுமார் 80 சதவீதமாகக் காணப்பட்ட முட்டை உற்பத்தித் திறன், தற்போது 50 முதல் 60 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கோழித் தீவனத்திற்குப் பயன்படுத்தப்படும் மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமையும் உற்பத்திச் செலவுகள் உயர்வடைவதற்குக் காரணமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வெதுப்பகங்கள் தமது தயாரிப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளதால் முட்டைக்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சந்தையில் செயற்கையான முறையில் முட்டையின் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும், கேள்வி மற்றும் விநியோகத்திற்கு இடையிலான மாற்றமே விலை உயர்வுக்குக் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முட்டையின் விலை அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் தொடரக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.