ஐக்கிய அரபு அமீரகத்தில் லாரி விபத்தில் இந்தியர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று சாலையில் இருந்த பல வாகனங்கள் மீது மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர், 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் புஜைரா அமீரகத்தின் நுழைவாயிலில் உள்ள ஒரு சாலையில் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்றின் ஓட்டுநர் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அந்த லாரி மற்றொரு வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்ததுடன், போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்தச் சாலையில் நின்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீதும் மோதியது" என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலால் "லாரியில் தீப்பிடித்தது; அந்தத் தீ மற்ற வாகனங்களுக்கும் பரவியதில், பல உயிரிழப்புகள் நேரிட்டன" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களை அடையாளம் காண அதிகாரிகள் டிஎன்ஏ (DNA) பரிசோதனைகளைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துபாயில் உள்ள இந்தியத் தூதரகம், உயிரிழந்தவர்களில் இந்தியர்களும் அடங்குவர் என்று உறுதிப்படுத்தியுள்ளது.