யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
மோசடியாகச் சொத்துச் சேர்த்த சம்பவம் தொடர்பில் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ முதுகுவலி காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என அவர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இன்று சாட்சிய விசாரணைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்திருந்ததாகவும், மேலும் மூன்று சாட்சிகளை மாத்திரமே விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று சாட்சிகளையும் அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிபதி, வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.