குட்டிமணி – தங்கத்துரை சிலை விவகாரம் - விசாரணை !
கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர் கனகசபை கணேசகுமாரனிடம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பது தொடர்பாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக கணேசகுமாரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சிலைகளை அமைப்பதற்கான நிதி எவ்வாறு திரட்டப்பட்டது, யார் யார் எவ்வளவு நிதியுதவி வழங்கினார்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2026 ஜூலை 25ஆம் திகதி வல்வெட்டித்துறையில் குறித்த சிலைகளை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், அதற்கு முதல் நாள் வல்வெட்டித்துறை பொலிஸார் பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் சிலை அமைப்பதற்கு எதிராகத் தடை உத்தரவு கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சிலைகள் கிளிநொச்சியில் தயாரிக்கப்பட்டிருந்ததால் அவற்றைக் கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றி வைத்துள்ளதாகவும், இதனால் சிலைகள் இதுவரை நிறுவப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சிலை அமைப்பதற்கான பிரதான ஏற்பாட்டாளர் மீது கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறான சூழலில், குறித்த சிலை அமைப்பு விவகாரம் தொடர்பாக TELO கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கனகசபை கணேசகுமாரனிடம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.