கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மற்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் இவ்வீதி அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளில் காலநிலை தொடர்பான சவால்கள் இருந்த போதிலும் மாவட்ட மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு கிடைக்கப்பெற்ற நிதியை உரிய முறையில் உரிய காலப்பகுதிக்குள் பயன்படுத்தி தரமான வீதியை அமைத்துக் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஒப்பந்தக்காரர்களுக்கு உள்ளதால் அதனை சிறப்பாக நிறைவேற்றி மக்களின் அன்றாட தேவைகளுக்கு கையளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டு, அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கிராமிய மற்றும் நகர்ப்புற வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் விரிவாக ஆராயப்பட்டு,வேலைகளை விரிவுபடுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், 'Clean Sri Lanka' (தூய இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர், மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர்,உதவிப்பிரதேச செயலர், மாவட்ட செயலக துறைசார் திணைக்களத் தலைவர்கள், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொறியியலாளர்கள், ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.