சட்டமூலத்தால் ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து – சஜித் எச்சரிக்கை!
முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்தின் கீழ் அரசாங்கத்திற்கு வழங்கப்படவுள்ள விசேட அதிகாரங்கள், எதிர்காலத்தில் அந்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தியவர்களுக்கே எதிராகப் பயன்படுத்தப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கங்கள் நிரந்தரமானவை அல்ல என்றும், அதிகாரம் ஒருநாள் கைமாறும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், இன்று தாங்கள் அதிகாரத்தின் பிடியில் சிக்கமாட்டோம் என நினைப்பவர்கள், எதிர்காலத்தில் தாங்கள் உருவாக்கிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
1979ஆம் ஆண்டு தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) அனுபவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்திற்கு வழங்கப்படும் அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் பின்னர் மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் பயன்படுத்தப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில், நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் ஒரு வருடம் வரை தடுத்து வைத்தல், பொலிஸாரிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களைச் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளுதல், நீதித்துறை முன் அனுமதியின்றி தொலைபேசி பதிவுகள் மற்றும் இருப்பிடத் தரவுகளைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சரத்துக்கள் குறித்து அவர் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், ஒருவரின் தொடர்புகள், ஆடை, மொழி மற்றும் பச்சைக் குத்தல்கள் கூட சந்தேகத்திற்கான காரணங்களாகப் பயன்படுத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
இத்தகைய சட்ட ஏற்பாடுகள் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், ஊழல்களை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சங்கவாதிகள் உள்ளிட்ட தரப்பினரைப் பாதிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலம் ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் வெளியிட்டுள்ள கவலைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட அவர், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் பலிகொடுக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஒரு அரசாங்கம் தற்காலிகமானது. ஆனால் ஒரு தேசத்தின் சுதந்திரம் ஒருபோதும் தற்காலிகமானதாக இருக்கக்கூடாது” எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.