நடிகர் அமிதாப் பச்சனின் ஜல்சா இல்லத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் அமிதாப் பச்சனின் மும்பை இல்லத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று மின்னஞ்சல் மூலம் மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரது 'ஜல்சா' பங்களாவில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையின் தகவல்படி, இந்த மின்னஞ்சல் மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் மகாலட்சுமி பந்தய மைதானத்திற்கும் (Mahalaxmi Racecourse) அனுப்பப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறியவும் அனுப்பிய நபரை அடையாளம் காணவும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன்னதாக, அக்டோபர் 23ம் திகதியும் அமிதாப் பச்சனுக்கு இது போன்ற மிரட்டல் மின்னஞ்சல் வந்திருந்தது.
இந்த மிரட்டலால், 84 வயதான நடிகர் அமிதாப் பச்சன், தனது இல்லத்திற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களைச் சந்திக்கும்போது, குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் நின்று அவர்களை வரவேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.