புதிய அறிவியல் சாதனை: 1 கிராம் எடையுள்ள நுண்ணோக்கி மூலம் 8,500 மூளை நரம்பணுக்களைக் கண்காணிப்பு!
மூளையின் செயல்பாடுகளை விலங்குகள் சுதந்திரமாக இயங்கும் போதே கண்காணிக்கக்கூடிய, வெறும் ஒரு கிராம் எடையுள்ள வயர்லெஸ் நுண்ணோக்கியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
'ஏர்ஸ்கோப்' (Airscope) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், சீனாவின் சிங்ஹுவா பல்கலைக்கழகம் மற்றும் சீன மக்கள் விடுதலை இராணுவ மருத்துவப் பள்ளியுடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனத்தின் மூலம், எலிகளின் பெருமூளைப் புறணியில் உள்ள பல்வேறு பகுதிகளில் 8,500-க்கும் மேற்பட்ட நரம்பணுக்களின் செயல்பாடுகளைப் பதிவு செய்ய முடிந்துள்ளது.
வழக்கமான மூளைப் படமெடுக்கும் கருவிகளைப் போல அசைவுகளைக் கட்டுப்படுத்தும் கேபிள்கள் இல்லாமல், எலிகள் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் போது அவற்றின் மூளைச் செயல்பாடுகளை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதே இதன் சிறப்பம்சமாகும்.
இந்த ஆய்வின்போது, எலிகளின் சமூகப் போட்டி மற்றும் ஆதிக்க நடத்தைகளுடன் தொடர்புடைய மூளைச் செயல்பாட்டு வடிவங்களையும் விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர்.
Nature ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி, மனச்சோர்வு உள்ளிட்ட நரம்பியல் மற்றும் மனநலப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கான எதிர்கால ஆய்வுகளுக்கு உதவக்கூடும்.
எனினும், இந்தச் சோதனைகள் எலிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனிதர்களின் எண்ணங்களை வாசிக்கவோ அல்லது மனச்சோர்வைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கவோ இந்தச் சாதனம் தற்போது பயன்படுவதில்லை.