முருகனை நினைத்து வேல்மாறல் படித்தால் கஷ்டங்கள் பறந்தோடும் - எப்படி படிக்க வேண்டும் தெரியுமா?
முருகப் பெருமானின் அருளை பெற சொல்ல வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த பாடல்களில் ஒன்று வேல்மாறல். முருகனின் கையில் இருக்கும் வேலில் வீரம், கருணை, அருள் ஆகியவற்றை போற்றி துதிப்பதே வேல் மாறல் பதிகமாகும். இதை சரியான முறையில் எப்படி படித்தால் முருகப் பெருமானின் அருளை பெறலாம் என தெரிந்து கொள்ளலாம்.
வேல் மாறல் படிக்கும் சரியான முறை :
1. காலையில் அல்லது மாலையில் படிக்கலாம். குளித்துவிட்டு, அமைதியான இடத்தில் முருகப் பெருமானின் படம் அல்லது சிலை அல்லது வேல் முன்பாக அமருங்கள். சிறிய தீபம் ஏற்றி, பூக்கள் சமர்ப்பிக்கலாம்.
2. கண்களை மூடி, மனதை ஒருமுகப்படுத்தி, மனதிலுள்ள கவலைகளை சுருகனிடம் ஒப்படைப்பதாக எண்ணி, "ஓம் சரவண பவ" என்று 6 அல்லது 12 முறை சொல்ல வேண்டும்.
3. வேல் மாறல் பாடல்களைத் தெளிவாகவும், அவசரப்படாமலும் படியுங்கள். முதலில் ஒரு முறை முழுமையாகப் படிப்பதிலிருந்து தொடங்கலாம். நேரமும் பழக்கமும் இருந்தால் உங்கள் வசதிக்கேற்ப தொடர்ந்து, ஒரு நாளில் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்யலாம்.
4. வேல் மாறல் பாராயணம் முடிந்ததும், உங்கள் பிரார்த்தனையை மனதார முருகனிடம் சொல்லுங்கள்.
5. குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட நாளில் தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நம்பிக்கையுடன் மனதை அமைதி நிலையில் வைத்து படிப்பது மிகவும் முக்கியம்.
எத்தனை நாட்கள் படிக்க வேண்டும்?
பல முருக பக்தர்கள் தொடர்ந்து 48 நாட்கள் வேலுக்கு பூஜை செய்து வழிபட்டு, வேல் மாறல் படிப்பதை செய்கிறார்கள். இன்னும் சிலர் வேண்டுதல் நிறைவேறும் வரை காலையிலும், மாலையிலும் படிப்பது உண்டு. இதில் அவரவர்களின் வசதி மற்றும் வேண்டுதலுக்கு ஏற்ப நாட்களை முடிவு செய்து கொள்ளலாம்.
முருகனிடம் எப்படி வேண்டிக் கொள்ள வேண்டும்?
"முருகா, என் மனக்கஷ்டங்கள் அனைத்தையும் தாங்கும் மனவலிமையை எனக்கு கொடு. என் குடும்பத்தை காப்பாற்று. சரியான வழியை காட்டி, என் வாழ்க்கையில் நிம்மதியும் தைரியமும் கொடும். எப்போதும் எனக்கு துணையாக இரு. உன்னுடைய திருநாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் பாக்கியத்தை கொடு" என்று முருகப் பெருமானிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.