இலங்கை – துருக்கி இடையே விவசாயத்துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான விவசாயத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும், துருக்கியின் விவசாயம் மற்றும் வனவள பிரதி அமைச்சர் கலாநிதி அஹ்மத் பாக்சிக்கும் இடையில் அங்காராவில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்போது, நவீன விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், விவசாய ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், விவசாயத்துறையில் தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒத்துழைப்பின் மூலம் விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான துறைசார் உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.