டயகம ஈஸ்ட் வீதியைப் புனரமைக்கக் கோரி மக்கள் வீதிமறியல் போராட்டம்!

#SriLanka #Protest #Road #LANKA4 #East
Abi
6 hours ago
டயகம ஈஸ்ட் வீதியைப் புனரமைக்கக் கோரி மக்கள் வீதிமறியல் போராட்டம்!

டயகம ஈஸ்ட் பகுதிக்குச் செல்லும் வீதியை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு கோரி, அப்பகுதி மக்கள் இன்று (26) வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு, அத்துடன் இம்மாதம் 20ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவற்றின் காரணமாக, குறித்த வீதியின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வீதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதுடன், தற்போது முச்சக்கர வண்டிகள் மாத்திரமே ஒரளவுக்குப் பயணிக்கக்கூடிய நிலை காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், குறித்த வீதியில் அடிக்கடி விபத்துகள் இடம்பெற்று வருவதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த வீதியைப் பயன்படுத்தும் கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள், நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்பாக, நிறைமாதக் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் தீவிர நோயாளர்களை இந்த வீதியூடாக வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லும்போது, பயணத்தின் அதிர்வுகள் காரணமாக அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் கவலை வெளியிட்டனர்.

இதன்போது, எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் சாரதிகள், தோட்டத் தொழிலாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“எமது வீதியைப் புனரமைத்துத் தராமல் எந்தவொரு அரசியல்வாதியும் வாக்குக் கேட்டு வர வேண்டாம்” எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

டயகம ஈஸ்ட் வீதியை விரைவாகப் புனரமைத்து, தமது போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!