இந்தியப் பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு இயற்கை எய்தினார்!
இந்தியாவின் பிரபல சமையல் கலை நிபுணரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் புகழ்பெற்றவருமான செஃப் தாமு , தனது 72ஆவது வயதில் இன்று (25) காலமானார்.
செஃப் தாமு என அறியப்படும் கே. தாமோதரன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த இவர், பல தசாப்தங்களாகச் சமையல் துறையில் பணியாற்றியதுடன், பல்வேறு தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றிருந்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு, தொடர்ந்து 24 மணித்தியாலங்கள், 30 நிமிடங்கள், 12 விநாடிகள் சமையல் செய்து, 617 வகையான உணவுகளைத் தயாரித்ததன் மூலம் கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
சமையல் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், இந்திய அரசாங்கம் 2025ஆம் ஆண்டு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது.
மேலும், சமையல் கல்வி மற்றும் பயிற்சித் துறைகளிலும் பங்களிப்புச் செய்துள்ள செஃப் தாமுவின் மறைவு, இந்திய சமையல் துறையிலும் அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.