சீரற்ற வானிலையின் தாக்கம் தீவிரம்:12 பேர் பலி, 10,311 பேர் பாதிப்பு!
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய நிலையத்தின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, நாடளாவிய ரீதியில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 206 பிரதேச செயலகப் பிரிவுகள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2,826 குடும்பங்களைச் சேர்ந்த 10,311 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலையால் 28 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 1,807 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, தற்போது மூன்று பாதுகாப்பு நிலையங்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், அதிகாரிகளால் வெளியிடப்படும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.