ஆசிரியர் சேவைக்கான நேர்முகப் பரீட்சைக்கு 17,688 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டது ஏன்? சாணக்கியன்
ஆசிரியர் சேவைக்கு புதிதாக 23,800 பேரை இணைத்துக்கொள்வதாக ஆரம்பத்தில் குறிப்பட்டபோதும் தற்போது 17,688 பேருக்கு மாத்திரம் தற்போது நேர்முக பரீட்சைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெரிவுசெய்யும் புள்ளிகள், தகைமை முறைமை மற்றும் பாடப் பின்னணி என்பன எவை? இதற்கான மற்றும் தெரிவான பெயர்ப்பட்டியல் வெளியிடப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விவாத்தின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆசிரிய சேவைக்கு புதிய நியமனங்களை வழங்கும் செயற்பாட்டின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஆறு வருடங்கள் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அவசியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் ஊடாக அண்மையில் பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு, அவர்களின் ஆசிரியர் சேவை கால அவகாசம் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்தும் அது இன்னமும் செயற்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.