நீதிமன்றத்தை அவமதித்த பொலிஸ் மா அதிபரின் நிலை என்ன? – நாமல் எம்.பி. கேள்வி
சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத பொலிஸ் மா அதிபருக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை என்னவெனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, அதேபோன்று பொலிஸ் மா அதிபர் தொடர்பிலும் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துத் தாம் அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என ஒவ்வொரு அரசாங்கமும் கருதுவதாக அவர் விமர்சித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாகப் பொலிஸ் மா அதிபரும் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது மட்டுமே தீர்வாக அமையாது என்றார். அவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளே அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், போதைப்பொருள் கைப்பற்றல்கள் தொடர்பில் பெருமளவிலான செய்திகள் வெளியாகின்ற போதிலும், சமூகத்தில் போதைப்பொருள் பாவனை குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
துப்பாக்கிகள் அதிகளவில் கைப்பற்றப்படுவதாகக் கூறப்படும் நிலையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளனவா என்றும் கேள்வி எழுப்பினார்.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்ட சிலர் பல ஆண்டுகளாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், பிரதான வர்த்தகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, கைது எண்ணிக்கையை அதிகரிப்பதை வெற்றியாகக் கருதாமல், போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள பிரதான நபர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், போதைக்கு அடிமையானவர்களுக்கு முறையான புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.