யானை அச்சுறுத்தலிலிருந்து மக்களைப் பாதுகாக்க ஆளுநரிடம் கோரிக்கை!

#SriLanka #Elephant #Mullaitivu #LANKA4 #Visit #Safety #threats
Abi
1 hour ago
யானை அச்சுறுத்தலிலிருந்து மக்களைப் பாதுகாக்க ஆளுநரிடம் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் யானை வேலிகளை விரைவாக அமைத்துத் தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யானைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் நேற்று (22) துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான்குளம், ஐயங்கன்குளம், தேறாங்கண்டல், பாரதிநகர், புகழேந்திநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு களப்பயணம் மேற்கொண்டு, மக்களின் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பில் நேரில் கேட்டறிந்தனர்.

இதன்போது, வீதி அபிவிருத்தி, பாடசாலைகளின் அடிப்படை வசதிகள், சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

துணுக்காய்–தென்னியன்குளம் வீதியின் புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்ட ஆளுநர், ஐயங்கன்குளம் மகா வித்தியாலயம், தேறாங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் யோகபுரம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், உயர்தர வகுப்புகளை ஆரம்பித்தல், சுற்றுவேலி மற்றும் மண்டபம் அமைத்தல், மாணவர்களுக்கான விடுதி வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

அத்துடன், ஐயங்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்திய ஆளுநர், மருத்துவமனையைத் தரமுயர்த்துவது தொடர்பான மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

மல்லாவி ஆதார மருத்துவமனைக்குச் சென்ற ஆளுநர், மருத்துவ நிபுணர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குருதி வங்கி, வெளிநோயாளர் சேவை மற்றும் சத்திரசிகிச்சைப் பிரிவுக்கான கட்டட வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.

மேலும், பாரதிநகர் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கான கட்டடம் அமைத்தல், நெல் உலர்த்தும் தளத்தைப் புனரமைத்தல் மற்றும் புகழேந்திநகரில் மயானம் தொடர்பாக நிலவும் பிரச்சினையைத் தீர்த்தல் உள்ளிட்ட விடயங்களும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

இந்தக் களப்பயணத்தில் அமைச்சுக்களின் செயலாளர்கள், துணுக்காய் பிரதேச செயலாளர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!