ஆசிரியர் தெரிவு தொடர்பில் எழுந்த சந்தேகங்களுக்கு கல்வி அமைச்சு விளக்கம்!
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வுக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறித்த கவலைகளுக்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக செயலாளர் ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், , 23,600 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆசிரியர் சேவை விதிகளின்படி (Teacher Service Minute), வெற்றிடங்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு விண்ணப்பதாரர்களை, அதாவது 46,012 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
நேர்முகத் தேர்வுக்காக வெளியிடப்பட்ட ஆரம்பப் பட்டியலில் 17,688 விண்ணப்பதாரர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்ததையடுத்து எழுந்த கவலைகளைத் தொடர்ந்தே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.