சீன முதலீட்டுத் திட்டம் ரத்து; HSBC வெளியேறக்கூடும் என்ற அச்சம் – சஜித் எச்சரிக்கை
இலங்கையில் முன்னெடுக்கப்படவிருந்த பாரிய சீன முதலீட்டுத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், HSBC நிறுவனத்தின் உலகளாவிய சேவை மையமும் நாட்டிலிருந்து வெளியேறக்கூடும் என்ற தகவல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த 392 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தெற்காசிய வர்த்தக மற்றும் தளவாட மையத் திட்டத்திலிருந்து சீனாவின் China Merchants Port Holdings நிறுவனம் விலகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி ஹொங்கொங் பங்குச் சந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிவிப்பில், குறித்த முதலீட்டுத் திட்டம் கைவிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை துறைமுக அதிகாரசபை சுமார் 21.9 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தீர்வுத் தொகையாகச் செலுத்த இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, HSBC நிறுவனத்தின் உலகளாவிய சேவை மையம் பிலிப்பைன்ஸுக்கு இடமாற்றம் செய்யப்படக்கூடும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த இடமாற்றம் இடம்பெற்றால், சுமார் 3,000 நேரடி வேலைவாய்ப்புகளும் 500 மறைமுக வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். குறித்த இடமாற்ற நடவடிக்கை 2027 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், HSBC நிறுவனத்தின் சேவை மையம் தொடர்பான தகவல்கள் உண்மையாக இருக்கக்கூடாது எனத் தாம் நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய நிலையில், முதலீட்டுத் திட்டங்கள் கைவிடப்படுவதும் நிறுவனங்கள் வெளியேறக்கூடும் என்ற நிலைமை உருவாகுவதும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.