வெடிகுண்டு மிரட்டல்: சோபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்குப் பயணித்த ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானமொன்று, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பல்கேரிய தலைநகர் சோபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானத்தில் 51 பயணிகளும் ஆறு பணியாளர்களும் பயணித்துள்ளனர். விமானம் ருமேனிய எல்லைக்கு அருகில் பறந்துகொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதுடன், விமானத்தினுள் சந்தேகத்திற்கிடமான பொருளொன்றும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, பல்கேரிய விமானப்படையின் போர் விமானம் பாதுகாப்பு வழங்கிய நிலையில், குறித்த விமானம் சோபியா விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
தொடர்ந்து, விமானத்திலிருந்த பயணிகளும் பணியாளர்களும் வெளியேற்றப்பட்டதுடன், பாதுகாப்புப் படையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் விமானத்தில் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.