கிளிநொச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம் – பெருமளவான மக்கள் பங்கேற்பு!
கிளிநொச்சி நகர ரோட்டறக்ட் கழகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் நோய்நாடல் துறை மற்றும் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம், கிளிநொச்சி பாரதிபுரம் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
“சுகவாழ்வு” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மருத்துவ முகாம், காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இடம்பெற்றது. இதில் பெருமளவான பிரதேச மக்கள் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.
ரோட்டறக்ட் கழகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் தில்லையம்பலம் சர்வானந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் நோய்நாடல் துறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலைச்செல்வி சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், சித்த மருத்துவத்துறை விரிவுரையாளர்களான ரஜித்தா மிராஜ், நுஸ்ரத் ரோஷனா, கிளிநொச்சி மாவட்ட சமுதாய மருத்துவர்கள், சித்த மருத்துவ பீடத்தின் செயன்முறை வழிகாட்டுநர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களும் இம்முகாமில் பங்கேற்றனர்.
பிரதேச மக்களுக்கு இலவச சித்த மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாம், சுதேச மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மக்களின் நலனை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.