சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினம் இன்று!
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினம் இன்று (ஒக்டோபர் 15) அனுஷ்டிக்கப்படுகிறது.
பார்வைக் குறைபாடுடையவர்களின் சுதந்திரமான நடமாட்டம், பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பார்வைக் குறைபாடுடையவர்கள் அன்றாட வாழ்க்கையில் சுயமாகவும் பாதுகாப்பாகவும் பயணிப்பதற்கு வெள்ளைப் பிரம்பு முக்கிய உதவிக் கருவியாக விளங்குகிறது.
இது அவர்களின் சுதந்திரம், சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. 1964ஆம் ஆண்டு முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினமாக அங்கீகரிக்கப்பட்டது.
பார்வைக் குறைபாடுடையவர்களின் திறமைகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிப்பதுடன், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தடைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
பார்வைக் குறைபாடுடையவர்கள் கல்வி, தொழில், போக்குவரத்து மற்றும் சமூக வாழ்வில் சமமான வாய்ப்புகளைப் பெறுவதை உறுதிப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும்.
குறிப்பாக, வீதிகளில் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்திச் செல்லும் நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், பாதசாரிக் கடவைகளில் முன்னுரிமை வழங்குதல் மற்றும் பொது இடங்களில் தடையற்ற அணுகலை ஏற்படுத்துதல் அவசியமாகும்.
பார்வைக் குறைபாடுடையவர்களின் உரிமைகளை மதித்து, அவர்களுக்குச் சம வாய்ப்புகளை வழங்கி, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை இத்தினம் வலியுறுத்துகிறது.