பௌத்த மதத்திற்கான அரசியலமைப்புகள் காலத்திற்கேற்ப மாற வேண்டும் – சஜித்
இலங்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் தொடர்பில், தற்போது இடம்பெறும் சில சம்பவங்களைப் புரிந்துகொள்ள முடியாதுள்ளதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் காலத்திற்கேற்ப புதுப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கம்புறுப்பிட்டிய, சபுகொட இலங்கம்கொட புராதன ரஜமஹா விகாரை உள்ளிட்ட விகாரைகளின் தலைமைப் பீடாதிபதியும், ஸ்ரீ ரோஹண பிரிவின் சிரேஷ்ட அனுநாயக்கருமான ஓமாரே கஸ்ஸப தேரரைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்திற்கு வழங்கப்பட வேண்டிய முன்னுரிமையை உறுதிப்படுத்துவதுடன், ஏனைய மதங்களுக்கும் இனங்களுக்கும் உரிய இடமளிக்கப்பட வேண்டும் என்றும், காவியுடைக்கு உரிய மரியாதை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு வாரங்கள் செலவிட்டு குழுக்களை அமைப்பதற்குப் பதிலாக, 24 மணித்தியாலங்களுக்குள் தேவையான தகவல்களைத் திரட்டி விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதத் தலைவர்களின் ஆடைகளில் தலையிடாமல், காவியுடையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்போதைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் காலதாமதமின்றி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேரர்களின் காவியுடையை அகற்றும் நடவடிக்கை மிகவும் மோசமானது எனக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, அவ்வாறு செய்வதற்கு பொதுமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சட்ட மற்றும் ஒழுங்குவிதி மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்காக எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தன்னால் இயன்ற அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.