இலங்கையில் முதலீடு செய்ய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் நோக்கில், கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நேற்று (12) நடைபெற்ற 2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
இதன்போது, கொழும்பு துறைமுக நகரம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சுற்றுலாத்துறை, தகவல் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கைக்குப் புதிய பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
முதலீடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்காக வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகத்தைப் பேணுதல், தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை வகுத்தல், அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பணிகளுக்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்திலும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய வலுவான வர்த்தக சமூகத்தை நாட்டில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.