சமூக ஊடகங்களில் வெறுப்பு பேச்சை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
போலி சமூக ஊடகக் கணக்குகள் வாயிலாக வெறுப்புப் பேச்சைப் பரப்பும் நபர்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பல்வேறு சமூகங்களை இலக்கு வைத்து வெறுப்புப் பேச்சு பரப்பப்பட்ட பல சம்பவங்கள் குறித்து கணினி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
போலி கணக்குகளைப் பயன்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் நபர்களை - இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்களை - விசாரணைகள் மூலம் அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் குறிவைத்துச் செயல்படும் ஒரு திட்டமிட்ட குழு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை விசாரணையில் கண்டறியப்படவில்லை என்றும் சில சம்பவங்கள் மீது அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
நடைபெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக அது தொடர்பான தகவல்களை ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.