அபேக்ஷா வைத்தியசாலையில் CT இயந்திரம் செயலிழப்பு: 1,500 நோயாளிகள் பாதிப்பு!

#SriLanka #Hospital #LANKA4 #Patients
Riya
2 hours ago
அபேக்ஷா வைத்தியசாலையில் CT இயந்திரம் செயலிழப்பு: 1,500 நோயாளிகள் பாதிப்பு!

மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் CT சிமுலேட்டர் இயந்திரம் செயற்படாமையால், கதிர்வீச்சு சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 1,500-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் பயன்பாட்டிலிருந்த பழைய CT சிமுலேட்டர் இயந்திரத்துக்குப் பதிலாகப் புதிய இயந்திரம் நிறுவப்பட்டு, கடந்த மாதம் வைத்தியசாலை ஊழியர்களிடம் கையளிக்கப்பட்டது. 

எனினும், புதிய இயந்திரத்தின் மென்பொருள், கதிர்வீச்சு சிகிச்சையைத் திட்டமிடுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருளுடன் பொருந்தாமையால், அதனைச் செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, லீனியர் அக்சலரேட்டர் மூலம் வழங்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சைகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரத்திற்குப் பின்னர் பழைய இயந்திரம் அகற்றப்பட்டு, புதிய இயந்திரம் நிறுவப்பட்டபோதிலும், இதுவரை அதன் பரிசோதனை நடவடிக்கைகளைக்கூட ஆரம்பிக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்குப் பல மாதங்களாக அறிவிக்கப்பட்டும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் துறையில் கதிர்வீச்சு சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நோயாளிக்கு சுமார் 5 இலட்சம் முதல் 20 இலட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறுவைச் சிகிச்சை அல்லது இரசாயன சிகிச்சைக்குப் பின்னர் உரிய காலத்திற்குள் கதிர்வீச்சு சிகிச்சை வழங்கப்படாவிட்டால், புற்றுநோய் செல்களை அழிப்பதில் கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளின் சிகிச்சை பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், CT சிமுலேட்டர் இயந்திரத்தின் தொழில்நுட்பக் கோளாறை உடனடியாகச் சீர்செய்து, சிகிச்சை நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!