யுத்த நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்திய சகல காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை - அரசாங்கம் உறுதி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்திய சகல தனியார் காணிகளையும் கூடிய விரைவில் விடுவிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதேபோன்று பாதுகாப்பு நிமித்தம் விடுவிக்க முடியாத காணிகள் இருப்பின் அவற்றுக்கு உரிய நட்டஈடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (8) நடைபெற்ற அமர்வில் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு விடயத்தில் பலாலி போன்ற பகுதிகளில் கடந்த காலங்களில் வீதித் தடைகள் போடப்பட்டு வீதிகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தன. ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் அந்த தடைகளை நீக்கியுள்ளோம். தற்போது அந்த வீதிகள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. வடக்கில் இப்போது ஒரு இராணுவ சோதனைச் சாவடியும் கிடையாது.
இது தொடர்பில் மகிழ்ச்சியடைய வேண்டும். அதுபோன்ற முன்னேற்றங்கள் பல ஏற்பட்டுள்ளன. இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது முறையாக நடக்க வேண்டும். காணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டும். சில உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். மேலும் சிலர் இப்போது உயிருடன் இல்லை.
அத்துடன் தாமே உரிமையாளர் என்று வேறு சிலர் வருகின்றனர். இதுபோன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பில் முறையாக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எவ்வாறாயினும் கூடிய விரைவில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட சகல தனியார் காணிகளையும் விடுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.
விடுவிக்க முடியாமல் ஏதேனும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் அவற்றுக்கு நிச்சயமாக நியாயமான நட்டஈடு வழங்கப்படும் என்றார்.