அனோஜன் விவகாரம் - இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் சவுதி விஜயம்!
சவுதி அரேபியாவில் மத நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராஜா அனோஜனின் தண்டனையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட நால்வரடங்கிய விசேட இலங்கைக்குழு அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழுவினர் எதிர்வரும் திங்கட்கிழமை (05) சவுதி செல்லவுள்ளனர்.
இந்தக் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனோஜனுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து இதன் போது ஆழமாக ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், தற்போது இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொது மன்னிப்பிற்கான கோரிக்கையை எவ்வாறு சவுதி மன்னர் தலைமையிலான அரசாங்கத்திடம் முன்வைப்பது என்பது குறித்த சட்ட நடைமுறைகள் குறித்தே நாம் ஆராயவுள்ளோம்.
இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட கடிதத்தையும் கொண்டு செல்லவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.