பெர்முடாவிலிருந்து பாஸ்டனுக்கு சென்ற விமானம் மாயம் - தேடுதல் வேட்டையை ஆரம்பித்த அமெரிக்கா
பெர்முடாவிலிருந்து பாஸ்டனுக்குச் ஆறு பேருடன் சென்ற விமானம் ஒன்றின் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, காணாமல் போன அந்த விமானத்தை நான்டக்கெட் கடற்கரைக்கு அப்பால் தேடி வருவதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
கனடாவில் பதிவுசெய்யப்பட்ட அந்த அவசரகால விமானமானது, மாசசூசெட்ஸுக்குச் செல்வதற்காக பெர்முடாவின் எல்.எஃப் வேட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவோடு இரவாகப் புறப்பட்டபோது, அதில் நான்கு விமானப் பணியாளர்களும் இரண்டு பயணிகளும் இருந்ததாக, பெர்முடா விமான நிலையத்தை இயக்கும் ஸ்கைபோர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானத்தைத் தேடும் பணியில், வானிலும் கடலிலும் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகக் கடலோரக் காவல்படை தெரிவித்தது.
தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம், சனிக்கிழமை காலை நிலவரம் குறித்த தகவல்களைச் சேகரித்து வருவதாகவும், ஆனால் இதுகுறித்து மேலதிகத் தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.