இலங்கையில் சொந்த தயாரிப்பை உருவாக்கி சந்தைப்படுத்த கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள்
இலங்கையில் ஒரு சொந்த தயாரிப்பை உருவாக்கி, எந்தவித சட்டப் சிக்கல்களும் இன்றி நம்பிக்கையுடன் சந்தைப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து சட்ட நடைமுறைகளும் கீழே வரிசையாகத் தரப்பட்டுள்ளன.
வணிக பதிவு மற்றும் உள்ளூர் அதிகார சபை அனுமதி
- வணிகத்தை சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றுவதும் உள்ளூர் அனுமதி பெறுவதும் முதல் படியாகும்.
பிரதேச செயலகத்தில் வியாபாரப் பதிவு
- உங்கள் தயாரிப்புக்கு ஒரு பிராண்ட் பெயரைத் தேர்வுசெய்து, உங்கள் பிரதேச செயலகத்தில் தனிநபர் வணிகமாகவோ அல்லது கூட்டு வணிகமாகவோ பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
பிரதேச சபை அல்லது மாநகர சபை அனுமதி
- உங்கள் உற்பத்தி மையம் அமைந்திருக்கும் பிரதேச சபை அல்லது மாநகர சபையிடம் சென்று வர்த்தக உரிமம் மற்றும் சூழல் பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும்.
வரிகள் மற்றும் TIN இலக்கம்
- உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வணிகத்திற்கான TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது எதிர்கால வரி நடைமுறைகளுக்கு மிகவும் அவசியமாகும்.
சுகாதார மற்றும் உற்பத்தி இட அனுமதி
- நீங்கள் தயாரிப்பது உணவுப் பொருளாகவோ, பானங்களாகவோ அல்லது மூலிகை/அழகுசாதனப் பொருட்களாகவோ இருந்தால் இது மிகவும் முக்கியம்
PHO / PHI நேரடிப் பரிசோதனை
- உங்கள் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் உங்கள் உற்பத்தி இடத்தைப் பார்வையிட்டு, அங்குள்ள சுகாதார நிலைமைகள், தூய்மை மற்றும் காற்றோட்ட வசதிகளை ஆய்வு செய்வார்கள்.
- சுகாதார சான்றிதழ் மற்றும் ஆய்வக அறிக்கை: தயாரிப்பு மனித பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த ஆய்வகப் பரிசோதனை அறிக்கை மற்றும் PHI வழங்கும் சுகாதாரச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கட்டாய லேபிளிங் விதிகள்
- இலங்கையின் நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சின் நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின்படி லேபிளில் பின்வரும் அனைத்து விபரங்களும் தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்
தயாரிப்பின் பெயர் மற்றும் பிராண்ட்
- நுகர்வோருக்குத் தெளிவாகப் புரியும் வகையில் பொருளின் பெயர்.
உள்ளடக்கப் பொருட்கள்
- தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அதிக அளவிலிருந்து குறைந்த அளவு என்ற வரிசையில் குறிப்பிடப்பட வேண்டும்.
தயாரிப்பாளர் விபரம்
- தயாரிப்பாளரின் முழுப் பெயர், உற்பத்தி முகவரி மற்றும் அவசரத் தொடர்பு எண்கள்.
நிகர எடை / அளவு
- கிராம் (g), கிலோகிராம் (kg) அல்லது மில்லிலீட்டர் (ml) அளவில் துல்லியமாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள்
- தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதி மற்றும் தொகுதி எண்.
மொழிப் பயன்பாடு
- இலங்கையின் சட்டப்படி தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் விபரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
சேமிப்பு அறிவுறுத்தல்கள்
- பொருளைப் பாதுகாப்பாக வைக்கும் முறை (எ.கா: குளிர்ந்த உலர்ந்த இடத்தில் வைக்கவும்).
பிராண்ட் பாதுகாப்பு மற்றும் மேலதிக தரச்சான்றிதழ்கள்
- எதிர்காலத்தில் உங்கள் பிராண்டை வேறு யாரும் நகலெடுக்காமல் இருக்கவும், பெரிய கடைகளில் சந்தைப்படுத்தவும் இவை உதவும்.
வர்த்தக முத்திரை பதிவு
- உங்கள் பிராண்ட் பெயர் மற்றும் லோகோவை தேசிய அறிவுசார் சொத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டால், அதை வேறு யாரும் சட்டவிரோதமாகப் பயன்படுத்த முடியாது.
- பார்கோடு சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் பெரிய பல்பொருள் அங்காடிகளில் விற்கத் திட்டமிட்டால் GS1 Sri Lanka அமைப்பிடம் பார்கோடு பெற வேண்டும்.
SLSI தரச்சான்றிதழ்
- குறிப்பிட்ட சில பொருட்களுக்கு SLSI தரச்சான்றிதழ் கட்டாயமாகும். இது உங்கள் தயாரிப்பின் தரத்தை மக்கள் மத்தியில் பல மடங்கு உயர்த்தும்.
அளவீட்டு உபகரணங்கள் சான்றளிப்பு
- பேக்கிங் செய்யப் பயன்படுத்தும் தராசுகள் மற்றும் அளவீட்டு உபகரணங்கள் அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலைகள் திணைக்களத்தால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த சட்ட நடைமுறைகளை சரியா பின்பற்றி தொழிலைத் ஆரம்பித்தால், எவ்வித பயமும் இன்றி தைரியமாக உங்களோட வர்த்தகத்தை சந்தையில் உயர்த்தலாம்!